












சிறப்பு

 இலக்கியச் சிறப்பு

      “சீர்சான்ற நெல்லின் ஊர்கொண்ட உயர் கொற்றவ” எனும் மதுரைக் காஞ்சி வரிகளுக்கு சாலியூர் எனப் பொருள் கொள்கிறார் உ.வே.சாமிநாதய்யர், திருநெல்வேலிக்கு சாலியூர் எனும் பெயர் உண்டு என திருநெல்வேலி தல புராணமும், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழும் கூறுகின்றன. திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய மூன்றாம் திருமுறை, பன்னிரெண்டாம் திருமுறை, திருவிளையாடற்புராணம் ஆகியவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும், பலபட்டடை சொக்கநாதப்புலவர் எழுதிய காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், பகழிக்கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றிலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது. திருநெல்வேலி தல புராணத்தை நெல்லையப்ப பிள்ளை என்பார் எழுதியுள்ளார். அது 120 சர்க்கங்களையும் 6891 செய்யுள்களையும் கொண்டது.

  தேவார மூவர் முதலிகளின் பார்வையில் திருநெல்வேலி

      இத்திருக்கோயிலை சைவசமய குரவர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் எழுந்தருளி தமிழ்வேதம் பாடிப் பரவியிருக்கின்றனர். ஆனால் திருஞானசம்பந்தப் பெருமாள் அருளிய “மருந்தவை மந்திரம்” எனத் தொடங்கும் பதினொரு பாடல்கள் அடங்கிய திருப்பதிகம் மட்டும் கிடைத்துள்ளது (சம்பந்தர் தேவாரம் III 92-103) தேவார மூவரில் முதல்வரான திருஞானசம்பந்தர் (திருஞானசம்பந்தர் புராண பாடல் 886, 887) திருநாவுக்கரசர் (திருநாவுக்கரசர் புராணம் பாடல் 410) ஆகியோர் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளியதை தெய்வச்சேக்கிழார் எழுதிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெயரிபுராணத்தில் காணலாம்.


“பற்றார்தம் புரங்கள்மலைச் சிலையால் செற்ற
பரமனார் திருப்புத்தூர் பணிந்து போந்து
புற்றாகும் பணிபூண்ட புனித னார்தம்
பூவனத்தை புக்கிறைந்து புகழ்ந்து பாடிக்
கற்றாரும் தொழுதேத்தும் கானப் பேரும்
கைதொழுது தமிழ்பாடிச் சுழியல் போற்றிக்
குற்றாலம் குறும்பலாக் கும்பிட்டேத்திக்
வற்றுதைத்தார் நெல்வேலிக் குறுகினாரே
                                             -பெரியபுராணம்-886

புண்ணியனார் நெல்வேலி பணிந்து போற்றிப்
புரிசடையார் திருப்பதிகள் பலவும் சென்று
நண்ணி இனி தமர்ந்தங்கு நயந்து பாடி
நற்றொண்ட ருடன்நாளும் போற்றிச் செல்வார்
விண்ணவரைச் சென்றுந்தான் இலங்கை செற்ற
மிக்கபெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணியபொற் தடக்கை இராமன் செய்த
திருவீராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்
                                             -பெரியபுராணம் -887


அங்குறைந்து கண்ணுதலார் அடிசூடி அகன்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப் புறம்பனைசூழ் நெல்வேலி
செங்கண்விடை யார்மன்னுந் திருக்கானப் பேர்முதலா
எங்குநிகழ் தானங்கள் எல்லாம்புக் கிறைஞ்சுவார்
                                             -திருநாவுக்கரசர்

நெல்வேலி நீற்றழகர் தமைப்பணிந்து பாடிநிகழ்
பல்வேறு பதிப்பிறவும் பணிந்தன்பால் வந்தணைந்தார்
வில்வேட ராய்வென்றி விசயனெதிர் பன்றிப்பின்
செல்வேத முதல்வரமர் திருவிரா மேச்சரத்து.
                                             -சுந்தரமூர்த்தி நாயனார்

  கலைச்சிறப்பு

      மதுரை கோயிலைவிட பெருங்கோயிலான இத்திருக்கோவிலை சிற்பக்கலையின் சிகரம் என்றே சொல்லலாம். இக்கோவில் 5 கோபுரங்களோடு விளங்கும் ஒரு பெரிய கோயில், ஊருக்கு நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட ஒரு விரிந்த இடத்தை பிடித்துக் கொண்டு இருக்கிறது. இறைவன் சந்நிதி கோபுரத்தை விட இறைவி சந்நிதி கோபுரம் அழகு வாய்ந்தது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக் கரையில் நின்று பார்த்தால் அதன் கம்பீரம் புரியும். இப்பொற்றாமரைத் தீர்த்தத்தில் இறைவனே நீர் வடிவாகவும், பிரம்மன் பொன்மலராகவும் பூத்த புண்ணிய தாடகம் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.


     நாயக்கர் கால சிலை வடிவங்களான மகா மண்டபத்தில் அமைந்துள்ள வீரபத்திரன், அர்ஜூனன், பகடை ராஜா முதலியோர் சந்நிதி வாயிலில் அணி செய்கின்றனர். வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாக குழந்தையை ஏந்தி நிற்கும் தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள். மேலும் சேவல் சண்டை, அர்ஜூனனின் உடன்போக்கு, பிரகாரங்களின் மேற்கூரையில் செதுக்கப்பட்டுள்ள 12 இராசிகளின் சக்கரம், காமதகனம் நடந்த இடமாதலால் ஆங்காங்கே தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ரதி, மன்மதன் சிற்பங்கள் மற்றும் தாமிரசபையில் இறைவனின் திருநடனத்தை தேவர்குழாமெல்லாம் தரிசிக்கும் மரச் சிற்பங்கள் போன்றவை காணவேண்டிய சிற்பங்கள்.


     சுவாமி சந்நிதியின் மேல் பக்கமுள்ள ஆறுமுகநயினார் சந்நிதியில் ஆறுமுகப் பெருமான் மயில்மேல் அமர்ந்திருப்பது ஓரே கல்லில் ஆனது. ஆறுதிருமுகத்தையும் நாம் சுற்றி வந்து பார்த்து வணங்கலாம். சந்நிதி முன்பு மகாமண்டபத் தரையினில் பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி என்பவரால் வடிக்கப்பட்ட தாளச்சக்கரம் அமைந்துள்ளது. இது இசைக்கலைஞர்களுக்கு பெரிதும் பயன்படக்கூடியது. சுவாமி சந்நிதி அறுபத்திமூவர் சந்நிதியில் இராவணன், கயிலை மலையை பெயர்க்கும் காட்சி, யாழில் இசை பாடும் சிற்பக்காட்சி மனதை மிகவும் கவரும். சுவாமி சந்நிதி மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கச் சுவரில் இராவணன் மலை பெயர்த்தபோது அம்பிகை பயந்து சுவாமியைத் தழுவும் சிற்பம் உள்ளது.


 சிறப்பான மண்டபங்கள்

     

  • ஆயிரங்கால் மண்டபம் : 1000 தூண்கள் உடையது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறும் மண்டபம். இம்மண்டபம் 520 அடி நீளம் 63 அடி அகலமுடையது. பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி இம்மண்டபத்தில் நடைபெறும். இம்மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம், கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூசிப்பதாய் ஐதீகம்.(கச்சபாலயம் )

  • ஊஞ்சல் மண்டபம்: 96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்கள் உடையது. திருக்கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையன. இவ் ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிபெருமாள் பிள்ளையன் கி.பி.1635ல் கட்டுவித்தார்.

  • சோமவார மண்டபம் : சுவாமி கோயிலின் வடபக்கம் இது உள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிசேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கும் இங்கு வைத்து பூசை நிழ்கிறது. 78 தூண்களையுடைய பெரிய மண்டபம்.

  • சங்கிலி மண்டபம்: சுவாமி கோயிலையும் அம்பாள் கோயிலையும் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயர். 1647ல் வடமலையப்ப பிள்ளையவர்களால் கட்டப்பட்டது. இம்மண்டபத் தூண்களில் காமவிகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுணன் சிற்பங்கள் கண்ணைக் கவரும்.

  • மணி மண்டபம்: இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணி மண்டபம் என்பர். நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது. ஓரே கல்லில் சுற்றிச் சுற்றி பல சிறுதூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலிதோன்றும், தூண்கள் தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டும் வரும், மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் காலத்தால் முற்பட்ட இசைத்தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

  • வசந்த மண்டபம்: 100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடைக் காலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்தச் சோலைவனம் 1756ல் திருவேங்கிட கிருஷ்ணமுதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

  • சிந்துபூந்துறைத் தீர்த்த மண்டம்: சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையவர்களால் கட்டப்பட்டது. முக்கியமான தீர்த்தவாரிகள் அனைத்தும் இங்கு நடைபெறுகிறது.

  • ஶ்ரீபலி மண்டபம்: திருவிழாக்கள் தோறும் சுவாமியும் அம்பாளும் எழுந்தருள்வதற்கான உள்ள பல வாகனங்களும் வேறெங்கும் காணா வகையில் மிகவும் அழகானவையாகும்.


  பஞ்ச ரதங்கள்

      இத்திருக்கோயிலின் சுவாமி தேர் தமிழ்நாட்டிலேயே 3வது பெரிய திருத்தேர். 1504ல் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இரத வீதிகள் அரியநாயக முதலியாரால் வகுக்கப்பட்டது. பெரிய தேர் எடை 450 டன். பஞ்ச மூர்த்திகளுக்கும் தேர் உண்டு. மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்புத்தேர் பவனிவரும். தமிழ்நாட்டிலேயே வேறெந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான அற்புத மரச்சிற்பங்கள கொண்ட அம்பாள் தேர் இத்திருக்கோயிலில் உள்ளது.


 தாமிர சபை

      அருள்தரும் காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோயிலின் வரலாற்றில் தாமிர சபை நடனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சபைகளில் சிதம்பரம் பொற்சபையில் ஆனந்தத் தாண்டவமும், திருவாலங்காடு ரத்ன சபையில் ஊர்த்துவ தாண்டவமும், மதுரை வெள்ளியம்பலத்தில் சுந்தரத் தாண்டவமும், திருக்குற்றாலம் சித்திர சபையில் அசபா தாண்டவமும் புரிந்த எம்பெருமான் திருநெல்வேலி தாமிர சபையில் பிரம்ம தாண்டவம் எனப்படும் ஞானமா நடனம் செய்த காட்சியினை வேணுவன புராணம் அற்புதமாக எடுத்துரைக்கிறது.

      உற்சவ மூர்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவர் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர் பெருமானின் “குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்” என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜர் சந்நிதியும்காணவேண்டிய ஒன்று.


 தனிச்சிறப்புகள்

     

  • திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.

  • இரட்டைக் கருவறைகள் (வேணுவனநாதர், நெல்லை கோவிந்தர்)

  • முத்துசாமி தீட்சிதரால் இத்திருத்தலத்து இறைவி ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற ‘ஶ்ரீகாந்திமதம்’ எனும் பாடலால் பாடப்பெற்றுள்ளார்.

  • வருடாவருடம் தை அமாசாசையன்று பத்ரதீபமும் (பத்தாயிரம் விளக்குகள்), ஆறாண்டுகளுக்கு ஒருமறை தை அமாவாசையன்று லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின் போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. நீத்தார் கடன்களை (பித்ருகர்மா) சரிவர செய்யாதவர்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகி வாழ்கை செம்மையடையும் என்று கோடகநல்லூ சுந்தரசுவாமிகள் என்பார் இந்நிகழ்ச்சியை இத்திருக்கோயிலில் ஏற்படுத்தியுள்ளார்.

  • ஆறுமுக நயினார் சந்நிதியில் ‘வித்யா சக்கரம்’ ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் கல்வியில் சிறந்து விளங்க ஶ்ரீவித்யா ஹோமம் செய்ய ஏற்ற தலம்.

  • இல்லற வாழ்வில் கணவன் மனைவி இடையே நிலவ வேண்டிய கருத்தொற்றுமையை வலியுறுத்தும் விதமாக இத்திருக்கோயில் இறைவனுக்கு உச்சிகால பூஜைக்கான நிவேதனம் இறைவி சந்நிதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு, அர்ச்சகர்களால் எடுத்துச்செல்லப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இறைவியே இறைவனுக்காக உணவு தயார்செய்து எடுத்துச்சென்று படைப்பதாக ஐதீகம்.


 சிறப்பு வாய்ந்த சந்நிதிகள்

  • திருமூல மகாலிங்க சந்நிதி.

  • மார்பில் சிவலிங்கம் தரித்த நெல்லை கோவிந்தர் சந்நிதி.

  • தமிழ்நாட்டில் குபேரலிங்கம் அமையப்பெற்ற மூன்று திருக்கோயில்களில் ஒன்றான இத்திருக்கோயிலின் குபேரலிங்க சந்நிதி. (“திருநெல்வேலியுறை செல்வர்தாமே” – திருஞானசம்பந்தப்பெருமான் இத்திருத்தலத்தில் பாடிய பாசுரங்களை இவ்வாறு முடித்திருக்கிறார்.

  • செல்வத்திற்கு அதிபதி என நம்பப்படும் குபேரனுக்கே அருளியதால் இவ்வாறு பாடினாரோ!)

  • சனகாதி முனிவர்களுடன் அகத்தியர், கபிலர் ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களுக்கு ஞானம் அருளும் ஞானானந்த தட்சணாமூர்த்தி சந்நிதி.

  • 120 ஆண்டுகள் வாழ்ந்த அமாவாசை பரதேசி என்னும் சித்தரால் வழிபடப்பட்ட ஆறுமுக நயினார் சந்நிதி.

  • குரு தலமாம் திருச்செந்தூருக்கு இணையாக கால் மாற்றி அமர்ந்து யோக சின்முத்திரையுடன் முருகன் வள்ளி தெய்வானைக்க ஞானம் வழங்கும் குருமுருகன் சந்நிதி.

  • காய்ச்சல் முதலான நோய்களை குணப்படுத்தும் மூன்று முகம், மூன்று கால்கள், மூன்று கரங்கள் கொண்ட சுரதேவர். இவருக்கு வெந்நீர் அபிஷேகம் செய்து நெற்றியில் மிளகு பற்றுபோட்டால் எத்தகைய கடுமையான காய்ச்சலும் குணமாகி விடும் என்பது நம்பிக்கை.

  • குழந்தைப்பேறு அருளும்பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி.

  • மகிஷாசுரமர்த்தினி, மஞ்சன வடிவம்மன் (பண்டாசுர மர்த்தினி சந்நிதி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சன வடிவம்மன் சந்நிதிகளில் இராகு காலங்களில் விளகேற்றி வழிபாடு செய்தால் மணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும் பகைவர் தொல்லை நீங்கும்.

  • பொற்றாமரை கரையிலுள்ள சரஸ்வதி அம்மன் சந்நிதி.


 கல்வெட்டு சிறப்புகள்

      இத்திருக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இவற்றில் பல மிகவும் பழமையானவை. அவை வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற எழுத்துக்களில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டிருந்த போதிலும் திருக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் சம்பந்தர் காலத்திற்கு பிந்தியவையாகும். இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946-966) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும். தாசி ஒருவர் விளக்கெரிப்பதற்காக தினசரி ஆழாக்கு நெய் வழங்க தானம் அளித்த செய்தியை தருகின்றது. இக்கல்வெட்டு இறைவனை “திருநெல்வேலி பிரம்மபுரித் தேவர்” எனக் குறிப்பிடுகிறது.

     மூல மகாலிங்கர் கோயிலில் சோழன் தலைக்கொண்ட வீரபாண்டியன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் 10ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டவையாகும். இக்கல்வெட்டுகள் வட்டெழுத்தில் உள்ளன. இவை விளக்கெரிப்பதற்காக தானம் வழங்கிய செய்தியினைக் குறிப்பிடுகின்றன.

     முதலாம் ராஜேந்திரன் (கி.பி. 1012-1044), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070-1120) போன்ற சோழ மன்னர்களுடைய காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் இக்கோயிலில் முதல் திருச்சுற்றில் உள்ள வட்டத் தூண்களில் காணப்படுகின்றன.இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி.1190-1267)என்கிற பாண்டிய மன்னன் கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டில் இத்திருக்கோயில் இறைவனை ‘திருநெல்வேலி உடையநாயனார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

     மேலும் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-1244), விக்கிரம பாண்டியன் (கி.பி.1250-1276), வீரசோமேஸ்வரன் (கி.பி.1238-1258), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251 திருவாதிரை திருவிழா நடனம் பற்றியது), இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1258-1265), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி.1258-1308 – திருச்சுற்று மதில் எழுப்பியது) முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டியதேவன் (பொள்ளாப்பிள்ளையார் சந்நிதி உருவாக்கம்), பராக்கிரம பாண்டியன் (வேணுவனநாதர் எனும் பெயர் இடம்பெற்ற முதல் கல்வெட்டு), வீரசங்கிலி மார்த்தண்டவர்மன் (கி.பி.1546-இசைத்தூண் மண்டப உருவாக்கம்) போன்றோரின் கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன.